Wishes from Former Principals & Teachers

This column honours the former principals whose vision, dedication, and leadership shaped the growth, values, and academic excellence of our college. Their lasting contributions continue to inspire the school community today.

திருமதி இராஜேஸ்வரி சண்முகம்

கல்லூரியின் பழைய மாணவி, முன்னாள் ஆசிரியை, முன்னாள் பிரதி அதிபர்

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் உயர்தரம் 95ஆம் ஆண்டு மாணவிகளுக்கு எனது அன்பு வணக்கம்,

எமது பாடசாலைக்கு நீங்கள் ஒரு புதிய மின் வலைத்தளம் உருவாக்க உள்ளீர்கள் என்று அறிந்து பெருமைப் படுகிறேன். உங்கள் முயற்சி மிக வெற்றிகரமாக நிறைவேற எனது ஆசிகள் உங்களுக்கு என்றும் உண்டு. இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் அனைவரும் இலங்கையிலும் உலகெங்கிலும் பரந்து வாழ்ந்து வருகிறீர்கள்.

நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினதும் உங்கள் சமூகத்தினதும் தூண்களாக மிளிர்ந்து, எமது கலாச்சாரதைப் பேணி, விடாமுயற்சியால் மேலோங்கி, எமது பாடசாலை அன்னைக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பெண்கள் நன்கு படித்து வாழ்வில் உயரவேண்டும் என்ற எமது கல்லூரி உருவாகக் காரணமான விசாலாட்சி அம்மையாரின் கனவை நிறைவேற்ற வேண்டும். உங்கள் அனைவரது வாழ்விலும் மனநிறைவும் நிம்மதியும் ஆனந்தமும் திருப்தியும் நிறைந்திருக்க எமது நடுத் தோட்டப் பிள்ளையாரைப் பிரார்த்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன் ஆசிரியை

திருமதி இராஜேஸ்வரி சண்முகம்

நல்லம்மா குழந்தைவேலு

முன்னாள் ஆசிரியை மற்றும் போஷகர், யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் - கனடா

யாழ் நகர்கணியாய் திகழ்ந்திடும் யாழ் இந்து மகளிர் கல்லூரி துரித வளர்ச்சி பெற்று யாழ் நகரில் சிறந்த பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கல்லூரியில் கல்வி கற்ற மாணவிகள் பாரில் பல நாடுகளில் பரந்து வாழ்கிறார்கள். அவர்கள் தம் கல்லூரி தாயை மறவாது அதன் வளர்ச்சிக்கு மிகவும் உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கல்லூரியின் 95 ஆம் ஆண்டு (G.C.E A/L) மாணவிகள் மீள் ஒன்று கூடி தங்கள் கல்லூரிக்கு ஒரு உத்தியோகபூர்வ வலைத்தளம் அமைத்துக் கொடுப்பது எம் கல்லூரியை மேம்படுத்துவதற்கான சிறந்ததொரு செயல்திட்டம் ஆகும். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலைத்தளத்திற்கு தேவையான சகல தகவல்களையும் பெற்று திறமையாக செயலாற்றுவதை அறிய மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

இவர்களின் செயல் திட்டம் சிறப்பாக அமைய எங்கள் கல்லூரியின் குலதெய்வம் ராஜவரோதய பிள்ளையாரை வேண்டி என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

“உங்கள் முயற்சி கல்லூரியின் வளர்ச்சி”

நல்லம்மா குழந்தைவேலு

திருமதி சரஸ்வதி ஜெயராஜா

முன்னாள் அதிபர், யா/இந்து மகளிர் கல்லூரி

யாழ் இந்து மகளிர் கல்லூரி, கல்வி, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றைத் தொடர்ந்து பேணும் சிறப்புமிக்க கல்லூரியாகத் திகழ்கிறது. இந்த கல்லூரியின் வளர்ச்சிப் பயணத்தில் எனக்கும் பங்குபற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மகிச்சியடைகின்றேன்.

முக்கியமாக 1995 ஆம் ஆண்டு G.C.E. A/L மாணவிகள் ஒன்றுகூடி வலைத்தளம் அமைக்கும் முயற்சியானது எமது பழைய மாணவிகளின் ஒற்றுமையும், கல்லுரித் தாயில் வைத்த பற்றினையும் எடுத்துக்காட்டுகின்றது. கல்லூரி வரலாற்றில் சொல்லொண்ணாத்துன்பத்தை அனுபவித்தவர்கள். இவர்கள் இடப்பெயர்வு பலவிதமான இழப்புக்கள், கற்பதற்கு இடமில்லாமல் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தங்கியிருந்து மீண்டும் திரும்பிவந்து தம் கல்வியைத் தொடர்ந்தவர்கள். இவர்கள் இன்று உலகம் முழுவதும் பல துறைகளில் சிறந்து விளங்குவதுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும், கல்லூரியின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும் பாராட்டத்தக்கது.

இவர்கள் அனைவரும் கல்லுரிக்கேயான அதிகாரப்பூர்வ வளைத்ததளத்தை ஆரம்பித்து மேலும் கல்லூரியை மேன்மைப்படுத்த எடுக்கும் இம்முயற்சியானது வெற்றிகரமாக நிறைவேற மனதார வாத்துகிறேன். தொடர்ந்தும் உங்கள் ஆதரவு கல்லூரித்தாய்க்குக் கிடைக்கவேண்டுமென்று வேண்டி தாங்களும் சிறப்புடன் வாழ கல்லூரி விநாயகர் அருள்புரிவாராக.

"முயற்சி திருவினையாக்கும்."

திருமதி சரஸ்வதி ஜெயராஜா

திருமதி. வேதநாயகி பேரின்பநாதன்

முன்னாள் அதிபரும் ஓய்வுநிலைப் பிரதிக்கல்விப் பணிப்பாளரும்

வடமாகணத்தில் யாழ் நகரில் சைவத்தமிழ் பெண்களுக்கென அதற்கான பாரம்பரியங்களைக் கொண்ட கல்வியை வழங்கவென முன்னோரான சான்றோர்களால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி தான் யாழ் இந்து மகளிர் கல்லூரி. இன்று இக்கல்லூரி சகல துறைகளிலும் முன்னிலையில் வளர்ச்சி கண்டுள்ளது. கல்லூரி தாயின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்ளும் உலகெங்கும் வாழும் பழைய மாணவிகளில் 95 ஆம் ஆண்டு (G.C.E A/L) கற்ற மாணவ அணியினரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடான Official website வெளியீடு மிகவும் போற்றுதற்குரியது. கடந்த காலத்திலும் website ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இயங்கா நிலை ஏற்பட்டது. இக்குறைபாட்டை நிவர்த்திக்கும் முகமாக பழைய மாணவிகளின் 95 (G.C.E A/L) அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.

உலகெங்கும் வாழும் பழைய மாணவிகள் மட்டுமல்லாது சகலரும் கல்லூரியின் வளர்ச்சி போக்கினை அறிந்து கொள்வதற்கும் அவர்களின் பங்கு பற்றுதலோடு மேலும் கல்லூரியை முன்னேற்றுவதற்கும் இது வாய்ப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. உலகெங்கும் வாழும் பழைய மாணவிகள் கல்லூரி தாயின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி காணும் அதேவேளையில் தாயின் தேவைகள் அறிந்து அவற்றிற்கான தம் பங்களிப்பினை நல்குவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதில் முன்னாள் அதிபர் என்ற வகையில் மகிழ்வடைகிறேன்.

1995 G.C.E A/L கற்ற பழைய மாணவிகளின் இம்முயற்சி வெற்றியளிக்க எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இவ்வணியினரின் எதிர்காலம் சகல வளத்துடனும் சிறப்பாக அமைய இறையாசி வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி. வேதநாயகி பேரின்பநாதன்

திருமதி மிமலாதேவி விமலநாதன்

ஓய்வு நிலை அதிபர், யா/இந்து மகளிர் கல்லூரி

யாழ்ப்பாண மாவட்டத்தின் புகழ்பூத்த பெண்கள் கல்லூரிகளில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் கல்லூரியாக யாழ்/ இந்து மகளிர் கல்லூரி காணப்படுகின்றது. இக் கல்லூரி அன்னை வளர்த்தெடுத்த புதல்வியர்கள் பலர் உலகப்பந்தின் பல இடங்களிலும் ஆளுமை மிக்கவர்களாக , அன்னையை நேசிப்பவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 1995 இல் உயர்தரம் கற்ற மாணவிகள் ஒன்றிணைந்து எமது கல்லூரியின் அதிகார பூர்வ வலைத்தளத்தை அறிமுகப்படுத்துவது மட்டற்ற மகிழ்வையும் இனிய பல நினைவுகளையும் எம்மில் ஏற்படுத்தி நிற்கிறது. "ஒற்றுமையே பலம்" என்பதற்கிணங்க ஒன்றுபட்ட மகளிராக இவர்கள் செயற்படுவது காலத்தின் கட்டாய தேவையும் அன்னையின் எதிர்பார்ப்புமாகும்.

பண்பாட்டுச் செழுமையும் வரலாற்றுப் பெருமையும் மிக்க எமது கல்லூரி அன்னையின் வளர்ச்சிக்கு , அன்னையின்.ஆசீர்வாதம் பெற்ற மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று போல் என்றும் செயற்பட எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து நிற்கிறேன் .

திருமதி மிமலாதேவி விமலநாதன்

திருமதி கனகாம்பிகை ஜெகநாதன்

கல்லூரியின் பழைய மாணவி, முன்னாள் ஆசிரியை, முன்னாள் போஷகர் (யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் சிட்னி கிளை, அவுஸ்திரேலியா)

உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

"திருமிகும் எங்கள் யாழ்நகர்க்கணியாய்த் திகழ்ந்திடும் கல்லூரி" (கல்லூரி கீதம்)

யாழ் இந்து மகளிர் கல்லூரி, கல்வி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கின்ற ஒப்பற்ற உன்னத கல்லூரியாக யாழ்ப்பாணத்திலே விளங்குகிறது. இங்கு கல்வி கற்ற மாணவிகள் பலரும் உலகின் பல்வேறு பாகங்களிலும் பரந்து வாழ்ந்தாலும் தமக்குக் கல்வியறிவூட்டிய கல்லூரித்தாயை மறப்பதில்லை. கல்லூரியின் முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை தம்மால் இயன்ற அளவு நிறைவேற்றி வருகின்றனர்.

1995 ஆம் ஆண்டு G.C.E A/L மாணவிகள் யாவரும் ஒன்றிணைந்து கல்லூரிக்குரிய வலைத்தளம் அமைக்கும் முயற்சியானது பெரிதும் பாராட்டத்தக்கது. யா/இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் கல்வித் துறையில் மட்டுமல்லாது, மற்றும் பல துறைகளிலும் சிறந்து விளங்குவது, அவர்களுக்கு கல்வி அறிவூட்டிய ஆசிரியர்களாகிய எமக்குப் பெரிதும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கின்றது. மாணவிகள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து கல்லூரிக்குரிய வலைத்தளத்தை ஆரம்பித்து வைப்பது, கல்லூரியை மென்மேலும் வளம் படுத்த உதவும் எனலாம்.

இம்முயற்சியானது வெற்றிகரமாக அமையவும், அனைவரும் சிறப்புடன் வாழவும், எமது கல்லூரியின் குலதெய்வமான ராஜவரோதய பிள்ளையார் என்றும் அருள் புரிவாராக.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"

திருமதி கனகாம்பிகை ஜெகநாதன்

செல்வி அ கந்தையா

கல்லூரியின் பழைய மாணவி, முன்னாள் ஆசிரியை, மற்றும் போஷகர், யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் - யாழ்ப்பாணம்

இன்று நாம் வாழும் காலம் கோபம், போட்டி, பொறாமை, சுயநலம் போன்ற பல்வேறு பட்ட மனப்போக்குடையவராக வாழ்ந்து கொண்டிருக்கும் காலமாக உள்ளது. பாடசாலைகள், நல்ல வகையில் கற்றற் செயற்பாடுகள், மாணாக்கரை வழிப்படுத்தல், செயற்திறன் மிக்கவராக, தூய மாணவராக மாற்றும் வகையில் அமைந்தால் மாணவர்கள் நல்லவர்களாக வளர்ந்து பெரியவராவர். அந்த வகையில் பழைய மாணவர்களது செயற்பாடுகள் பாடசாலை வளாகத்தில் நற்சிந்தனை, அர்ப்பணிப்பு என்பவற்றை வளர்த்தெடுக்கும்.

அந்த வகையில் இங்கு கற்ற, வெளிநாடுகளில் வசிக்கும் எமது பழைய மாணவிகள் பாடசாலையின் வளர்ச்சி மாணவர்களது கல்விக்கு தேவையான அனுசரனை என்பவற்றை தம் மனதில் பதித்து, இந்து மகளிர் கல்லூரி என்ற பெயரை தம் மனதில் சுமந்து, கலை கலாச்சாரங்களை பேணி காக்கும் பொறுப்பு மிக்கவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். எவ்வளவு சிரமம் இருந்தாலும் தமக்கு அறிவூட்டி வாழ வைத்த தெய்வம் என நினைத்து, பழைய மாணவர் சங்கம் என்ற பெயரில் எல்லோரும் ஒன்று திரண்டு ஒரு வீட்டுப் பிள்ளைகள் போல் பாடசாலை நலனுக்காக சமயமறிந்து பெரும் சேவைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வலைத்தளம் அமைத்து அதனூடாக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலால் இந்த செயற்பாட்டை செய்து தருகிறார்கள்.

1995 ஆம் ஆண்டு உயர்தரம் கற்றவர்கள் இங்குள்ள மாணவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக இந்நிகழ்வை செய்கிறார்கள் என்று நினைக்கும் போது பெருமையாக இருப்பதோடு, இங்கு தற்போது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவிகள் மனதிலும் தனக்கன்றிப் பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற மனப்பாங்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இறைவன் ஒருவரையும் தனக்காக படைக்கவில்லை. எல்லோரும் ஒன்றே என்ற நோக்கோடு வாழ்ந்து மேன்மையுறப் படைத்தார். இந்து மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் ஒருவரே என நினைத்து, வேண்டும் போதெல்லாம் பாடசாலை நலன் கருதி செயல்படும் திறனும் உதவும் மனப்பாங்கும் அனைத்து மாணவர் மனதிலும் பதிய வேண்டும்.

வரும் காலத்தில் பாடசாலையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் வலையத்தளம் ஊடாக எல்லோரும் பார்த்து ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு மகிழ்ந்து வாழ வழி அமைத்திருக்கும் 1995 ஆம் ஆண்டு (உயர்தரம்) பழைய மாணவிகள் அனைவருக்கும் எனது நல் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெரும் மகிழ்வடைகிறேன்.

“வாழ்க வளர்க வளம் பெறுக”

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”

செல்வி அ கந்தையா

திருமதி சா.சாந்தலிங்கம்

கல்லூரியின் பழைய மாணவி, முன்னாள் ஆசிரியை, மற்றும் போஷகர், யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் - யுனைடெட் கிங்டம்

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் (95 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவிகள்) ஒன்றிணைந்து பாடசாலைக்கு என ஒரு இணைய தளம் ஆரம்பிக்க உள்ளதனை இட்டு பெருமகிழ்வு அடைகிறேன்.

இணையதளத்தின் மூலம் பாடசாலையில் நடக்கும் நிகழ்வுகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், பாடசாலையில் நடக்க இருக்கும் விழாக்கள் பற்றிய அனைத்தையும் 24/7 இணையத்தளம் ஊடாக பல்வேறு நாட்டிலும் பரந்து வாழும் மாணவிகள் பார்க்க வசதி உண்டு என்னும் போது பெரும் மகிழ்வு.

மேலும் பல்துறையில் பணியாற்றும் பழைய மாணவிகள் இதனூடாக ஒன்றிணைந்து பாடசாலையின் வளர்ச்சிக்கும் தம்மால் ஆன உதவிகளைச் செய்ய இது பயன் தரும் என்பதிலும் ஐயப்பாடு இல்லை.

இவர்கள் சேவை வெற்றி காண எல்லாம் வல்ல இறை அருள் வேண்டி வாழ்த்துகிறேன்.

திருமதி சா.சாந்தலிங்கம்